கூட்டமைப்புடன் இணைந்து   பணியாற்றுவதற்குத் தயார் இலங்கைக்கான புதிய தூதர் கோபால் உறுதி; சம்பந்தனுடன் தொலைபேசியில் நேற்று பேச்சு

“இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன்.”

– இவ்வாறு இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் கோபால் பாக்லே வாக்குறுதியளித்தார்.

இவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் காணொளி மூலம் கையளித்த பின்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளைப் பொறுப்பேற்ற கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், சில நிமிடங்கள் மனம் விட்டுப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“எமது நட்புறவு தொடர வேண்டும். நேசக்கரத்தை நாம் பலப்படுத்த வேண்டும். விரைவில் தங்களைச் சந்திப்பேன்” என்றும் இரா.சம்பந்தனிடம் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.

“இந்தியாவும் இலங்கையும் அயல் நாடுகள். நட்புறவு நாடுகள். இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்” என்று இதன்போது இரா.சம்பந்தன் உறுதியளித்தார்.

“இலங்கையில் தமிழர்களுக்குக் கௌரவமான – நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் இந்தியாவின் பங்களிப்பு – முழு ஆதரவு தொடர வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றும் இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.