ஜனநாயக மரபினை மீறி வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது- அடைக்கலநாதன்

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஜனநாயக மரபு மீறலைக்கொண்டு செயற்படுத்துவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் கிறிஸ்டி குகராயாவின் 21ஆவது நினைவுதினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபி வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைத் தலைவர் து.நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரெலோவின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், ரெலோவின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் குறூஸ், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “நாம் எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திப்பதற்குத் தயாராகவே இருக்கின்றோம். மக்களுடைய ஜனநாயக முறை பயன்படுத்தப்பட வேண்டும். மக்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கொரோனா தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஜனநாயக மரபு மீறலைக்கொண்டு செயற்படுத்துவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சூழலுக்கு ஏற்றவகையில் தேர்தலை நடத்தவேண்டும். மக்கள் கூட்டமைப்பை நிச்சயம் ஆதரிப்பார்கள். அவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய நிலைமையை நாம் ஏற்படுத்தவேண்டும்.

எங்களுடைய மக்களின் விடுதலைதான் எமது பிரதான நோக்கம். அதற்காகவே துப்பாக்கி ஏந்தினோம். அது புனிதமானது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் சுமந்திரன் தொடர்பாக எதிர்மாறான கருத்துக்களை நாம் இதுவரையில் கூறவில்லை.

எனினும், முக்கிய பதவியில் இருந்துகொண்டு விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து என்பதை ஏற்கமுடியாது. ஆயுதப் போராட்ட விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அத்தனையும் ஒன்றாக இருக்கவேண்டும். இதுகுறித்து இரா.சம்பந்தன் ஐயாவைச் சந்தித்து உரையாடவுள்ளோம்.

அத்துடன், அவர் தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்களில் சிங்களமொழி பெயர்ப்பு வந்திருக்கின்றது. வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம் அந்தவிடயம் தொடர்பாக சரியான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதிலே, சொல்லப்பட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை.

சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்கைளை மாறிசொல்லவேண்டிய நிலை எமக்கில்லை. அப்பிடிச் சொல்வது எங்களை மலினப்படுத்துவது போலத்தெரிகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.