மன்னார் பிரதேச சபை அமர்வில் விசேட தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மன்னார் பிரதேச சபையின் அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு நடத்துவது உட்பட விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) சபையின் தலைவர் சாகுல் ஹமீட் முஹமது முஜாகீர் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், பிரதேசத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டபோதும் குறிப்பாக 3 விடயங்கள் ஏகமனதாக தீர்மானத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
கூட்டம் ஆரம்பித்து, சிறிதுநேரத்தின் பின்னர் உறுப்பினர் முன்வைப்பின்போது உறுப்பினர் கதிர்காமநாதன் விஜயனால், முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூர நினைவுகூர அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிமிட அஞ்சலியின் பின்னர் தமது முன்வைப்பை ஆற்றுவதாக குறிப்பிட்டதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, “எம் இனம், மதத்திற்கு அப்பால் தமிழினம் அழிக்கப்பட்ட நாள். ஏன் நினைவு நாள் சபையில் அனுஷ்டிக்கப்படவில்லை என எழுந்த விவாதத்தையடுத்து இனிவரும் காலங்களில் நினைவஞ்சலி அனுஷ்டிப்பது எனும் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து புத்தளம் மற்றும் ஏனைய இடங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அசாதாரண சூழலினால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை, 2010ஆம் ஆண்டு குடும்பங்களாக பதியப்பட்டதன் பின்னர் உள்ள குடும்பங்களுக்கும் வழங்குவதற்கான கோரிக்கை தொடர்பாக சபையின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், பிரதேச சபையின் உப தலைவர் முஹமட் இஸ்மாயில் முகமட் இஸதீன் உரையாற்றுகையில், கொரோனா நோயினால் மரணிப்பவர்களுக்கு அவரவர்க்கு உரிய மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அடக்கம்செய்ய வேண்டும் என்ற பிரேரணையும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குறித்த விடயமும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை