கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கானதா? சுமந்திரன் எனும் தனிமனிதனுக்கானதா?. மயூரன் காட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கானதா ? அல்லது சுமந்திரன் எனும் தனிமனிதனுக்கானதா? என கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமே முடிவெடுக்க வேண்டுமென முன்னாள்  வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனின் தொடர்ச்சியான கருத்துக்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் வகையிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கையும் நம்பிக்கையையும் வீழ்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் அமைந்து வருகின்றது.
இவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் சுமந்திரன் அவர்கள் சிங்கள பேரினவாத சக்திகளினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரம்பேசும் பலத்தை சிதைப்பதற்கு திட்டமிட்டு உள்நுழைக்கப்பட்டவர் என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை நியாயப்படுத்துவது போன்று அமைத்துள்ளது.
புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியேற்றியமையை ஒரு இன சுத்திகரிப்பு எனவும் , விடுதலைப் புலிகளால் காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் எனவும்  , விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனவும் தொடர்ச்சியாக கருத்துக்களை கூறிவரும் சுமந்திரன் அதன் உச்சகட்டமாக பிரபல சிங்கள சமூக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதை யாழ்ப்பாணத்திலும் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன் எனவும் இலங்கையின் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதைவிடவும் தான் ஐந்து வயதுமுதல் சிங்கள மக்களுடன் வாழ்வதாகவும் அதை ஒரு அதிஸ்ரமாக கருதுவதாகவும் கூறியவர் யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவது உறுதியெனவும் பதிலளித்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்களை சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து எனவோ அல்லது அதற்கு வேறு வியாக்கியானங்களை கூறியோ கடந்துபோக முடியாது. காரணம் மூன்று கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கும் இவரின் கருத்தை சிலர் கூட்டமைப்பின் கருத்தாகவே எடுத்துக்கொள்வார்கள். இதனால் பொதுத்தேர்தலை விரைவில் எதிர்கொள்ள வேண்டியுள்ள கூட்டமைப்பிற்கு இவரது கருத்து தமிழ்மக்கள் மத்தியில்  இருக்கும் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கம் கொண்டதாக  இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.
கூட்டமைப்பு உருவாக்கப்படும் போது தான் அரசியலில் இல்லாத காரணத்தினால் கூட்டமைப்பை உருவாக்கியது யாரென தனக்கு தெரியாது என பிறிதொரு ஊடகத்திற்கும் பதிலளித்துள்ளார் அப்படியானால் கூட்டமைப்பின் வரலாறு தெரியாத நீங்கள் எதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியினை பெற்றுக்கொண்டீர்கள்? ஐந்து வயதுமுதல் சிங்கள மக்களோடு அதிஸ்ரத்தோடு வாழ்க்கையை வாழ்ந்த நீங்கள் கூட்டமைப்பின் வரலாற்றை அறியாதவர் , விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர் , இலங்கையின் தேசிய கீதத்தையும் தேசிய கொடியையும் ஏற்றுக்கொள்ளும் சிங்கள தேசிய உணர்வுள்ள  நீங்கள் என்ன காரணத்திற்காக உங்களது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்நுழைந்தீர்கள்?
தமிழர்கள் வாள் ஏந்தி போராடிய காலம்முதல் இன்றுவரை காலத்திற்கு காலம் துரோகத்தால் பலமிழக்க செய்ப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சியாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரது வயது முதிர்ச்சியையும் தமிழரசுக்கட்சியின் தலைவரின் இயலாமையையும் பயன்படுத்தி குறுகிய காலத்தில் தமிழரசுக்கட்சியின் ஊடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் தனது செல்வாக்கை உயர்த்திக்கொண்டு கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த ஏனைய அங்கத்துவ  கட்சிகளை  பலமிழக்க செய்யவும் ஓரங்கட்டவும் பல முயற்சிகளை மேற்கொண்டுவந்த சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு உள்ளேயும் தமிழ்த் தேசிய உணர்வுள்ளவர்களையும் நீண்டகால செயற்பாட்டாளர்களையும் புறக்கணித்து தனது கொள்கைகளை வழிமொழியக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழரசுக்கட்சியின் தலைமையையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலமையையும் கைப்பற்றும் செயற்திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றார்.
இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தி  தொடர்ந்தும் தனது விசேட  அதிரடிப்படை பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
உண்மையில் பார்க்கப்போனால் ஏனைய கட்சிகளைவிட சுமந்திரன் பிரதிநிதித்துவப்படுத்தும்   தமிழரசுக்கட்சியே விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் விசுவாசமாக செயற்பட வேண்டும் காரணம் 2001 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளை 2004 தேர்தலில் நீண்ட காலமாக  கிடப்பில் கிடந்த தமிழரசுக்கட்சியின் சின்னத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக்கி அதை தமது அரசியல்  துறை போராளிகள் மூலமும் அரசியல் செயற்பாட்டாளர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் மூலமும் வடக்கு கிழக்கின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டுசேர்த்து இன்றுவரை அந்த சின்னத்திற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கும் நிலையை உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளேயாகும்.
இதைக்கூட அறிந்திருக்காத இவர் கூட்டமைப்பின் பேச்சாளராக இருப்பதும் எதிர்காலத்தில் தலைமையை கைப்பற்ற துடிப்பதும் வேடிக்கையாகவுள்ளது. இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் அரசியல் மேடைகளில் சுமந்திரன் ஏறும்பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடலாம்.
எனவே இவற்றை கருத்திற்கொண்டு கூட்டமைப்பின்  தலைமையும் தமிழரசுக்கட்சியின் தலைமையும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கானதா? அல்லது சுமந்திரன் எனும் தனிநபருக்கானதா? என்பதில்  சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.