வரவேற்கக்கூடிய நிலைப்பாடு

தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் முக்கியமான கொள்கைத் தீர்மானம் ஒன்றை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று எடுத்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும். 

வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது புலிகளின் இசைக்கல்லூரி ஒன்று இயங்கியது. மிருதங்கத்தில் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்த கண்ணதாசன் அக்கல்லூரியின் பொறுப்பாளராகச் செயற்பட்டார். 

இறுதி யுத்தத்தின் போது ஏனைய போராளிகளுடன் அவரும் சரணடைந்தார். படையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசை தொடர்பான பீடத்தில் அவர் விரிவுரையாளராகப் பல வருடங்களாகக் கடமை யாற்றி வந்தார்.

அச்சமயம், கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது மகள் ஒருவரை யுத்த சமயத்தில் கண்ணதாசன் பலவந்தமாக இயக்கத்தில் சேர்த்தார் என்றும் அதனால் தமது மகள் இறக்க வேண்டி நேர்ந்தது என்றும் தெரிவித்து மேற்கொண்ட பொலிஸ் முறைப்பாட்டின் அடிப்படையில் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் கண்ணதாசன் தரப்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் அவர் போராளியாகச் செயற்பட்ட காலத்தில் ஆற்றியவை என்று கூறப்படும் சகல குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார், புனர்வாழ்வு என்பதே இழைக்கப்பட்ட குற்றங்களில் இருந்து சம்பந்தப்பட்டவரை மீட்பதற்கான அரச நடவடிக்கைதான் என்பதை எடுத்துரைத்திருந்தனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் இன்னொரு தடவை முன்னர் இழைத்த குற்றத்துக்காக அல்லது இழைக் கத் தவறிய விடயத்துக்காக மீண்டும் தண்டிக்கப்படமுடியாது என்பதை கண்ணதாசனின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

எனினும் அந்த வாதத்தை ஏற்க மறுத்த வவுனியா மேல்நீதி மன்றம் கண்ணதாசனுக்கு ஆயுள்காலச் சிறைத் தீர்ப்பை வழங்கியது. இசை விரிவுரையாளர் கண்ணதாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழித்து – புனர்வாழ்வு பெற்று கண்ணதாசன் விடுவிக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுக ளுக்குப் பின்னர் – 2017 ஜூலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. யுதத்தின் போது கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளில் சுமார் பன்னீராயிரம் பேரை அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசு, புனர்வாழ்வளித்து, மன்னிப்பு வழங்கி விடுவித்தமையுடன் அவர்களை சமூகத்திலும் இணைத்துக் கொண்டது.

இந்தப் பன்னீராயிரம் போராளிகளும் சமூகத்துக்குள் ஒன் றித்து வாழத் தொடங்கிய சமயத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் மூலம் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பன்னீராயிரம் முன்னாள் போராளிகளும் அவர்கள் சமூகத்தில் மீள இணைக்கப்பட்டாலும், முன்னைய போராளிகள் கால வாழ்க்கையில் இழைத்தவை என்று கூறப்படும் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படலாம் என்ற ஆபத்து ஏது நிலையை – முன்னுதாரணத்தை – வவுனியா மேல்நீதி மன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தி நின்றது.

வவுனியா நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கண்ணதாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார்.

அரசுத் தரப்பில் ஆஜரான மேலதிக சட்டத்தரணி குமாரத்தின ஆச்சரியமான முடிவு ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை விதித்த மேல்நீதி மன்றத்தின் தீர்ப்பைச் சரி எனத் தெரிவித்து அதற்காக வாதாடுவதில் இருந்தும் விலகிக் கொள்வது என சட்டமா அதிபர் தீர் மானித்திருக்கின்றார் என அவர் நீதிமன்றத்தில் அறிவித்தார். அதாவது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிக்கு, பழைய குற்றம் ஒன்றுக்காகத் தண்டனை விதிக் கப்படுவதை சட்டமா அதிபர் – அதாவது அரசு – ஆதரித்து நிற்க மாட்டாது என்ற கோட்பாட்டு ரீதியான முடிவே சட்ட மா அதிபர் தரப்பால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இக்காரணத்தினால், மேன்முறையீட்டு மனுதாரர் கண்ணதாசனை விடுவிக்கும் உத்தரவை வழங்கும்படி சுமந்திரன் நீதி மன்றைக் கோரினார். எனினும், நேற்றைய வழக்குத் தவணைக்கு கண்ணதாசன் நீதிமன்றுக்கு சிறைத்தரப்பினால் கூட்டிவரப்படவில்லை.

அவர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருக்காதமையால் – அடுத்த தவணைக்கு ஜூலை 14ஆம் திகதி – வழக்கு எடுக்கப்படும் போது – அவரது கருத்தையும் உள்வாங்கி, அந்த வழக்கை மீள் விசாரணைக்கு உத்தரவிடுவதா அல்லது மனுதாரரை விடுதலை செய்வதா என்பதை நீதிமன்றம் தீர்மானித்து அறிவிக்கும் என நீதியரசர்கள் தெரிவித்தனர்.

எது, எப்படி என்றாலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி எவரும் முன்னைய போராட்ட காலக் குற்றத்துக்காக மீள விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு சார்பாக அரசோ – அரசின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களமோ – செயற்படாது என்ற இந்த முடிவு நீதியின் பாற்பட்டது. கொள்கை ரீதியில் பாராட்டப்படக்கூடிய ஒரு தீர்மானம்தான்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்