மே 20 முதல் போக்குவரத்து திணைக்கள சேவைகள் முற்பதிவு அவசியம்!
எதிர்வரும் மே 20ஆம் திகதி முதல், வரையறைக்குட்பட்ட விதத்தில் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக அமுலிலிருந்து வந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த எமது திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும், குறிப்பிடத்தக்களவு ஆளனியினரை ஈடுபடுத்தி, சிற்சில வரையறைகளுக்குட்பட்ட விதத்தில், மே20ஆம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பிப்பதற்கு எமது திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல். வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் உள்ளிட்ட த்திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கும் சேவை பெறுநர்கள், வார நாட்களில் மு.ப.9.00 தொடக்கம் பி.ப. 4.00 வரை. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி, முன்னரே ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
அதற்குப் புறம்பாக எந்தவொரு காரணத்தையும் முன்னிட்டு சேவைகள் வழங்கப்பட மாட்டாது.
மேலும், எம்மால் இதற்கு முன்னர் செயற்படுத்தப்பட்ட ஒரு நாள் சேவையும் மீள அறிவிக்கப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த காலப்பகுதிக்கு சலுகைக் காலமொன்று வழங்கப்பட்டுள்ளதால் சேவைபெறுநராகிய நீங்கள் அநாவசிய நெரிசல்களைத் தவிர்த்து அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயமாகப் பின்பற்றி, சுகாதாரப் பாதுகாப்புகளைக் கைக்கொண்டும். பொறுமையுடனும், பொறுப்புடனும் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நீங்கள் திகதியொன்றை ஒதுக்கிக்கொள்ளும்போது அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் உரிய திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்பதைக் கருத்திற் கொள்ளவும்.
அவ்வாறே இத்திணைக்களத்தினால் திகதியொன்று ஒதுக்கப்படுதல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் போக்குவரத்தினை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் ஒரு அனுமதி எனக் கருதிக் கொள்ளுதல் கூடாது” – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை