பிளவுபட்ட ரணில் – சஜித் அணிகள்  ஒன்றிணைந்தாலும் தோல்வி உறுதி – மஹிந்த அணி சொல்கின்றது



“பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது.”

– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட இரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் காரணமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்த வேட்புமனுக்களை அவர்கள் கேள்விக்குட்படுத்துகின்றார்கள்.

சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை செல்லுப்படியற்றதாக்கவே கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட  அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றார்கள்.

அத்துடன் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கலும் செய்துள்ளார்கள்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. நாடாளுமன்றத்துக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உண்டு.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கே பெரும்பாலான ஆதரவு உண்டு. கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் நிச்சயம் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஐக்கிய தேசியக் கட்சியினர் இரத்துச் செய்வார்கள்.

இதன் பின்னர் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் . அப்போது இரு தரப்பினரும் (ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும்) இணைந்து வேட்புமனுத் தாக்கல் செய்யவே நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அவர்கள் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள்.

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியகே கட்சி மீண்டும் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் புறக்கணித்து விட்டார்கள்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.