தாலிக்கொடியை அறுத்துச் சென்ற கொள்ளையர்கள் சில மணிநேரங்களில் பிடிபட்டனர்- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், நவாலி, சின்னப்பா வீதி இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் கொடியை அபகரித்துச் சென்றவர்கள் சில மணி நேரங்களிலேயே மானிப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தை வைத்து கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர். குறித்த சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 பவுன் தங்க தாலிக்கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்த வழிப்பறிக்கொள்ளைச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற பெண்ணின் தாலிக் கொடி குறித்த முச்சக்கர வண்டியில் வந்து இறங்கிய ஒருவரால் அபகரிக்கப்பட்டது. அந்த முச்சக்கர வண்டியின் சாரதி வாகனத்திலேயே தயாராகவிருந்த நிலையில் மற்றையவர் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டில் முச்சக்கர வண்டியின் இலக்கமும் வழங்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், முச்சக்கர வண்டியின் இலக்கைத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமையாளரை (சாரதி) கைதுசெய்தனர். அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாலிக்கொடியை அறுத்தவரை நேற்று பின்னிரவு 11 மணியளவில் பொலிஸார் கைதுசெய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.