‘ஈழம்’ பூர்வீகப் பெயரல்ல – பிரித்தானிய பத்திரிகையிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் தி கார்டியன் (The Guardian) என்ற இணையத்தளத்தில் வெளியான வினாவில், இலங்கையின் பூர்வீகப் பெயர் ‘ஈழம்’ எனத் தெரிவிக்கப்பட்டமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கண்டனம் வெளியிட்டதையடுத்து, குறித்த இணையத்தளத்திலிருந்து அந்த வினா நீக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளியான தி கார்டியன் செய்திப் பத்திரிகையின் 2020 மே 15ஆம் திகதி இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட சுற்றுலா வினா விடைப் போட்டியில் ‘ஈழம் என்பது எந்தப் பிரபலமான தீவின் பூர்வீகப் பெயர்?’ என வினவப்பட்டுள்ளது.

இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்தால், அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில் ‘இந்தத் தீவின் அண்மைய கிளர்ச்சி அமைப்பின் முழுப்பெயர் எல்.ரீ.ரீ.ஈ. – தமிழீழ விடுதலைப் புலிகள்’ எனும் மேலதிக விளக்கமும் ஏற்படுகிறது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் தி கார்டியன் செய்திப் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தது.

அந்தக் கடிதத்தில் இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக குறித்த இணையத்தளத்தில் வெளியான வினாவை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் அதற்கு மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையிலேயே கார்டியன் இப்போது அதன் இணையத்தளத்தில் இருந்து குறித்த வினாவை நீக்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.