குருவுக்கு மிஞ்சிய சீடன்- சுமந்திரனின் கருத்து குறித்து சிவசக்தி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஆயுதப்போராட்டம் சம்பந்தமாக எதிர்மறையான கருத்துக்களை கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிந்தார்.

அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தததை அடுத்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அக்கூற்று பற்றி தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை விடுத்து அதற்கான நியாயப்படுத்தல்களையும் செய்திருந்தார்.

உண்மையிலேயே சுமந்திரன் தன்னுடைய அரசியல் தலைவராக சம்பந்தனையே கொள்வதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் சம்பந்தனைப் பொறுத்தவரையில் அவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் பற்றி வெளிப்படையான நிலைப்பாடுகளை தெரிவிக்கும் ஒருவர் அல்லர்.

நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ் மக்களுக்கான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்து உரையாற்றியிருக்கின்றார். குறிப்பாக, போரின் பின்னரான நிலைமையிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடனான காலத்திலும் இத்தகைய சித்தரிப்புக்களை அதிகமாகச் செய்திருந்தார்.

அதுமட்மன்றி, விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும் நாடாளுமன்றத்திலே கூறியுள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

அவர்கள், தன்னை கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கவில்லை என்றும், அவர்களின் கருத்துக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் பொய்யுரைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில், அவரினை தலைவராக ஏற்றிக்கும் சுமந்திரன் விடுதலைப் புலிகளையும், ஆயுதப் போராட்டத்தினையும் எவ்வாறு ஆதரிப்பார். குருவுக்கு மிஞ்சிய சீடன் என்பது போன்று சம்பந்தனை விட ஒருபடி மேலே சென்று போராட்டத்தினை கொச்சைப்படுத்தி இருக்கின்றார். பின்னர் சர்ச்சைகள் ஏற்படவும் அவருடைய கருத்துக்களை தெளிவுபடுத்தி சம்பந்தன் அறிக்கை விடுகின்றார். இது வேடிக்கையாக இருக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக எத்தனையோ உயிர்த் தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த தியாகங்களை மதிக்காது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை தியாகிகள் என்பதும் பின்னர் அவர்களை துரோகிகள் என்பதும் மேட்டுக்குடி அரசியல் தரப்பின் வழக்கமாகிவிட்டது. எனவே தமிழ் மக்களே தீர்க்கமான தீர்மானம் எடுப்பதற்கு தலைப்பட்டுள்ளார்கள்” என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.