யாழ். குடத்தனையில் வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் காயம்
யாழ். குடத்தனை பகுதியில் வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, 24 வீடுகள் மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
யாழ். குடத்தனை மத்தியில் நேற்று (சனிக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் 30 வீடுகள் கொண்ட வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருக்கும் அக்கிராமத்தில் வசிக்கின்ற இளைஞர்களுக்கும் இடையில் ஏற்கனவே முரண்பாடு நிலவி வந்துள்ளது.
நேற்று முன்தினமும் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இளைஞன் வசிக்கும் வீட்டுத்திட்டத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்துக்கட்டியவாறு பத்துக்கும் மேற்பட்டவர்கள் வாள்கள், கொட்டன்கள், இரும்புக்கம்பிகளுடன் வீட்டுத்திட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து, வீடுகளின் ஜன்னல்கள், வீட்டில் இருந்த உடமைகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த வன்முறை கும்பலின் தாக்குதலில் 7க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டில் இருந்த உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், 6 மோட்டார் சைக்கிள், ஒரு வாகனம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடைபெறும்போது, பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத் தரவில்லையென்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலை 5 மணிக்கு பின்னர் தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் உரிமையாளர்கள் 16 பேர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னரே, இரவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை நடத்திச் சென்றதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை