ஆயுதப் போராட்டத்திற்கான காரணத்தை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதே முறை- கருணாகரம்

தமிழ் மக்களின் நியாயமான ஆயுதப் போராட்டத்தினையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டுமே தவிர அதனை கொச்சைப்படுத்தக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கோவிந்தம் கருணாகரமின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார் உட்பட கட்சி உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முள்ளியவாக்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்பட்ட அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது உரையாற்றிய கருணாகரம், “முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலை எவராலும் மறக்க முடியாததாகும். எமது வருங்கால சந்ததி கூட இந்த அவலத்தை வருடந்தோறும் நினைவுகூர வேண்டும்.

எமது விடுதலைப் போராட்டம் முப்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று 2009ஆம் ஆண்டு மேமாதம் மௌனிக்கப்பட்டது. இருந்தும் நாங்கள் விடுதலை அடையவில்லை. எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு நிலையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் ஜனநாயக ரீதியாக போராடவேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

கடந்த ஒருவாரமாக தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டுவருகின்ற விடயமாக விடுதலைப் போராட்டம் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனின் கூறிய சர்ச்சைக் கருத்தாகும்.

உண்மையில் இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடைபெற்றது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டதன் விளைவாக முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் தலைவர்கள் அகிம்சை ரீதியாகப் போராடி உண்ணாவிரதமிருந்து, ஊர்வலங்களை நடத்தி, அடிவாங்கி எத்தனையோ இனக் கலவரங்களை சந்தித்து பல உயிரிழப்புகள், பொருள் இழப்புகளுக்குப் பின்பு ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்ற காரணத்தினால் நாங்களாக விரும்பி ஏற்றுக்கொள்ளாமல் இந்த ஆயுதப் போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது.

ஆயுதம் தூக்கியவர்கள் பைத்தியக்காரர்கள் அல்லர். எமது இனத்தின் விடுதலைக்காகவும் எமது இனம் சுதந்திரமாக தங்களைத் தாங்களே ஆளவேண்டும், சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே அகிம்சைப் போராட்டம் கைகொடுக்காத பட்சத்திலே ஆயுதப் போராட்டத்தை நாடினோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

2001ஆம் ஆண்டிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகும்போது அனைத்துப் போராட்ட இயக்கங்களும் மிதவாதக் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்துதான் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதற்கமையவே உருவாக்கப்பட்டது.

அதன் பேச்சாளராக இன்றிருக்கும் சுமந்திரன், சிங்கள மக்கள் மத்தியில் எமது ஆயுதப் போராட்டத்தையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் நியாயப்படுத்த வேண்டுமே தவிர ஆயுதப் போராட்டம் பிழையானது என்று கூறக்கூடாது.

ஆயுதப்போராட்டம் நியாயமானது என்று ஒரு காலத்திலே சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வடமாகாண யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், அழகான முறையில் சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கின்றார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.