தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தனியார் துறையில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் தற்போது வேலை இழந்து வருகின்றனர் என கூறினார்.

குறைந்தபட்ச ஊதியம் 14,500 அல்லது அடிப்படை சம்பளத்தின் பாதியை ஊழியர்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டாலும், சம்பளத்தை செலுத்த முடியாது என்று தெரிவித்து நிறுவனங்கள், தொழில் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் குறிப்பாக 83 ஆடைத்தொழில் நிறுவனங்கள் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று கூறி கடிதம் எழுதியுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் மானியத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட ஹர்ஷ டி சில்வா, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அரசியல் நலன்களுக்காக இந்த தொகை வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.