முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று எவரும் அனுஷ்டிக்க முடியாது இப்படிக் கூறுகின்றது பாதுகாப்பு அமைச்சு; கண்காணிப்பதற்கு அரச படைகள் குவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு, கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க முடியாது எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போராட்டமாகவே கருதப்பட்டு வருகின்றது.
பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் எந்த நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெறக்கூடாது. எனவே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படக்கூடாது. வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நிகழ்வுகளை நடத்த ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றால் அவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தினர் குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதியைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்” – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை