இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கவிதாஞ்சலி
முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கவிஞர் அண்ணாதாசன் வரைந்த “உளம் கரைந்து உருகி நிற்கின்றோம். முள்ளி வாய்க்கால்…” எனும் தலைப்பிலான கவிதாஞ்சலி.
(உளம் கரைந்து உருகி நிற்கின்றோம்.
முள்ளி வாய்க்கால்…)
நியமங்கள் புறக்கணிக்கப்பட்ட
போர்க்களம்.
சாட்சியங்களை
அகற்றிவிட்டு
அரசு செய்த
கொடுஞ்சமர்.
போர் யானைகளின்
நடுவே
புல்லாய் நசியுண்டனர்
பொதுமக்கள்.
மதுரை எரிக்கப்பட்டபோது
ஆணையிடப்பட்ட
விதிவிலக்குகள் கூட
மகிந்த குழுவினரால்
மதிக்கப்படவில்லை
உணவு, மருந்து
தண்ணீர்கூட இல்லாமல்
வதைபட்டு மாண்டனர்
அப்பாவி மக்கள்.
பாராளுமன்றத்துச் செங்கோல்
படுத்துக்கொண்டது.
பாருலக நாடுகளும்
அரசுக்குப்
பல்லக்குத் தூக்கின.
ஒப்பீட்டளவில்
அரசு செய்தது
ஒரு, கோழைத்தனமான
யுத்தம்.
உலக யுத்தங்களின்
போது கூட
குறித்த குறுகிய நிலப்பரப்பில்
இத்தனைதொகை மக்கள்
இப்படிக் கொல்லப்படவில்லை.
உள்நாட்டுக் கிளர்ச்சியின் போது
தமது நாட்டு மக்களையே
இவ்வாறு
அதர்மத்துக்கு ஆளாக்கிய
அரசுகள் இல்லை.
போர்க்குற்றம் நடைபெற்றதை
அரச தளபதியே
ஒப்புக்கொள்கின்றார்.
இத்தனையையும்
மனதில் நிறுத்தியுளோம்.
இதற்கான
நீதிகாண் உழைப்பில்
இன்னும் துல்லியமாய்
ஈடுபடுவோம்.
வதையுண்டு கொலையுண்ட
எங்கள்
இரத்தத்தின் இரத்தங்களே!
உங்களை நினைந்து
அஞ்சலிக்கின்றோம்.
உளம் கரைந்து
உருகி நிற்கின்றோம்.
(அண்ணாதாசன் கி. துரைராசசிங்கம்
பொதுச் செயலாளர்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி)
கருத்துக்களேதுமில்லை