மட்டக்களப்பில் தடுத்து நிறுத்தப்பட்டது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…
மட்டக்களப்பில் தடுத்து நிறுத்தப்பட்டது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பணிமனையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் தலையீட்டாலும், நீதிமன்றக் கட்டளையினாலும் தடுத்து நிறுத்தப்பட்டது.
உலகெங்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் உணர்வுபூர்வமாக தமிழ் மக்களினால் அஞ்சலிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், மட்டக்களப்பில் இன்று பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதேபோல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் அதன் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர முதல்வர் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், பொதுத் தேர்தல் வேட்பாளர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன், தற்போதைய சுகாதார நடைறைகளைப் பின்பற்றி நடைபெறவிருந்த இந்த நிகழ்வானது பொலிஸாரின் தலையீட்டாலும், நீதிமன்ற உத்தரவின் பிரகாரமும் தடுத்து நிறுத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பணிமனைக்கு வருகை தந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதி மன்ற உத்தரவினை பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கினார்கள். அதன் பின்னர் இந்நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை