வடக்குக்கு விசேட கவனிப்பு;ஒன்றுகூடுவோருக்கு எதிராக உடன் சட்ட நடவடிக்கை!
ஜே.எப்.காமிலா பேகம்
வட மாகாணத்தில் கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் நடந்தால் அதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண பாதுகாப்புத் தரப்புக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர் தாயகமெங்கும் பெரும் கெடுபிடிகளுக்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி சில நாட்களாக பல்வேறு இடங்களில் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.
இந்நினைவேந்தல்களின் போதும், பொலிஸ் – இராணுவக் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன.
அத்துடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை தனிமைப்படுத்த நீதிமன்றில் பொலிஸ் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் நேற்று முன்தினம் (17) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 11 உறுப்பினர்களைத் தனிமைப்படுத்த உத்தரவிட்டது.
இதற்கு எதிராக நேற்று (18) நீதிமன்றம் சென்ற முன்னணியினர் அந்த உத்தரவை வாபஸ் பெற வைக்கும் அளவுக்கு ஆதாரங்களை அடுக்கினர்.
இதற்கிடையில், நேற்று பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்காகச் சென்ற முக்கியஸ்தர்கள் பலர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமக்கு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்கு அமையமே தாம் இதனைச் செய்கிறோம் என அவர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், வட மாகாணத்தில் ஒன்றுகூடல்கள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால், வட மாகாண பாதுகாப்புத் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை