அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டியதில்லை – ஜனாதிபதி

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. செய்ய வேண்டியது நிறுவனங்களை முன்னேற்றுவதாகும். அதற்காக வருமானம் ஈட்ட வேண்டும். வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும்.

செலவுகளையும் வீண்விரயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் மூலமே அரச நிறுவனங்கள் இயங்குகின்றன. எனவே நிறுவனங்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர்களுடன் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகள் பொதுமக்கள் நலன் பேணல் சேவைகள் என்பதால் வருமானம் ஈட்டுவதை அவற்றிடமிருந்து எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏனைய நிறுவனங்கள் தமது பராமரிப்பு மற்றும் ஊழியர் மேம்பாட்டிற்கு தேவையான வருமானங்களை தாமே ஈட்டிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையிலும் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன. நிறுவனத் தலைவர்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும். அவ்வாறில்லாத போது நிறுவனங்கள் வீழ்ச்சியடையவும் முடியும். இந்தப் பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு மட்டுமன்றி எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்காகவும் அரச நிறுவனங்களை திட்டமிட்ட வகையில் பலப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஓலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமது நேயர்கள் யார் என்பதை சரியாக விளங்கி அவர்களின் இரசனைக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சக நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிக்குமாறும், முறையான திட்டத்துடன் வருமானம் ஈட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் ஜனாதிபதி கூட்டுத்தாபன தலைவர்களிடம் தெரிவித்தார்.

நிறுவனங்கள் அடைந்துள்ள நிலை பற்றி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக அறிவூட்டுங்கள் தம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்காது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பதற்கு அவர்களை உற்சாகப்படுத்துங்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கூட்டுத்தாபன ஊழியர்களின் அதிகபட்ச வினைத்திறனை உறுதிப்படுத்துவதுடன், முறையான திட்டத்தின் கீழ் வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர விளக்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.