நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் – ஜஸ்மின் சூக்கா
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவெந்தலின் 11 வது ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள காணொளி அறிவிப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இந்த காணொளி அறிவிப்பில், இறுதி போரின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல் முடிவிற்கு வந்து பல வருடங்கள் கடந்தும், இறுதி யுத்தத்தின்போது எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை உறுதியாக கூற முடியாதுள்ளமை, கொடுமையான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கமும் அதிகாரிகளும் தங்களிடம் சரணடைந்தவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என தொடர்ந்தும் மறுத்துவருகின்றனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெறுமனே உயிர்தப்பியவர்களின் ஆவணங்களை பதிவு செய்வதை மாத்திரம் மேற்கொள்ளவில்லை.
மாறாக யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கான ஆதாரங்கள் தடயங்களை சேகரித்து ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒரு நாள் அவற்றிற்கு காரணமானவர்களை நாங்கள் பொறுப்புக்கூறச்செய்யலாம் என்றும் கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் எங்களிடமுள்ள ஆவணங்களை பயன்படுத்தி கொலைகளுக்கு காரணமானவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தி வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சாத்தியமான சூழ்நிலைகளின்போது அவர்களுக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்க எல்லைக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என்பதையும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் 1000 நாட்களைக் கடந்த நிலையிலும் மேற்கொள்ளப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக தாங்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர், இந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், அவர் முக்கிய பதவிகளிற்கு யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையை தாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை