5000 ரூபாய் நிதியுதவியில் மோசடி? கணக்காய்வாளர் திணைக்களம் கண்காணிப்பு
சுமார் நான்கு மில்லியன் இலங்கையர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் நிவாரணத் திட்டத்தை கண்காணிக்க கணக்காய்வாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த நிவாரண நடவடிக்கையில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் பெரேரா தெரிவித்துள்ளார்.
பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை குறித்தே தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தாங்கள் விரைவில் ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிப்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கிராமமட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து கணக்காய்வு விசாரணை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர்களிற்கு நமையளிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் குறிப்பிட்ட நிதியுதவியை பெறவேண்டியவர்கள் குறித்து தாங்கள் ஒரு பட்டியலை தயாரித்துள்ள போதிலும் உள்ளூராட்சி மட்டத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் 5,000 ரூபாயை வழங்கும் நடவடிக்கையில் பல சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக அரசியல் ஆதரவுடன் வேறு ஒரு பட்டியலை திணிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கிராம சேவையாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை