மன்னாரில் மினி சூறாவளியினால் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை…
கடந்த ஞாயிற்றுக் கிழமை (17.05.2020) மன்னாரில் இடம்பெற்ற மினி
சூறாவழியினால் பாதிப்படைந்த மக்களுக்கு அரசால் இழப்பீடுகள் வழங்கப்படலாம்
என தெரிவிக்கப்படுவதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அனர்த்த சேவைகள்
முகாமைத்துவ நிலையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (17.05.2020) மன்னாரில் ஒரு சில மணி நேரம்
இடம்பெற்ற மினி சூறாவழியினால் மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச
செயலகப் பிரிவுகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலையத்துக்கு
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி மன்னார் மாவட்டத்தில் 141 குடும்பங்களைச்
சார்ந்த 522 நபர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதில் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 65 குடும்பங்களைச் சார்ந்த
250 நபர்களும், நானாட்டான் பிரிவில் 18 குடும்பங்களைச் சார்ந்த 69
நபர்களும், மாந்தை மேற்கு பிரிவில் 13 குடும்பங்களைச் சார்ந்த 43
நபர்களும், முசலி பிரிவில் 29 குடும்பங்களைச் சார்ந்த 93 நபர்களும், மடு
பிரதேச செயலகப் பிரிவில் 16 குடும்பங்களைச் சார்ந்த 67 நபர்களும்
பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சேதம் அடைந்த வீடுகளில் நானாட்டான் பகுதியில் 02 வீடுகள்
முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 53
வீடுகளும், நானாட்டான் பகுதியில் 15 வீடுகளும், மாந்தை மேற்கில் 07,
முசலி பிரிவில் 24, மடு பிரதேச செயலகப் பிரிவில் 08 வீடுகளும் மொத்தம்
107 வீடுகள் பகுதியாக பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்துடன் மன்னார் நகர் பிரிவில் 13, நானாட்டான் பிரிவில் 07, மாந்தை
மேற்குப் பிரிவில் 01 மற்றும் முசலி பிரிவில் 05 மொத்தம் 26 வர்த்தக
நிலையகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அச்சங்குளப் பகுதியில் பாதுகாப்பு நிலையத்தில் ஒரு
குடும்பத்தைச் சார்ந்த மூன்று நபர்கள் தங்கியிருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்படைந்தவர்களின் நிலைகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில் அரசால்
வழங்கப்படும் இழப்பீடுகள் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை