யாழ் மாணவர்களின் மருத்துவ துறை அனுமதியில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராக நீதிமன்றம் சென்று பெற்றுக்கொடுக்க வழிவகை செய்தேன்!..
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்ளீர்த்தலில் பல குறைபாடுகள் காணப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள இஸட் ஸ்கோர் புள்ளி கணிப்பு என்ன அடிப்படையில் இடம்பெறுகிறது என்று யாருக்கும் தெளிவில்லை. குறிப்பாக இந்த புள்ளி கணிப்பீட்டில் ஒரு வெளிப்படைத் தன்மை மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ, புத்திஜீவிகளுக்கோ இல்லை.
யாருக்கும் தெளிவற்ற சூழ்நிலையில் அதை நடைமுறைப்படுத்துகின்ற தனிநபர் வேண்டுமென்றே செய்கிற அநீதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். அத்தகைய சந்தர்ப்பத்தில் தான் எனக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் பாரிய முரண்பாடு ஏற்பட்டது.
நான் ஒருபோதும் அநீதிக்கு துணை போவதில்லை, மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், என்ன அடிப்படையில் தெரிவு முறை இடம்பெறுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
நான் உயர் கல்வி பிரதி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் குறிப்பாக யாழ் மாவட்ட வைத்தியத்துறை தமிழ் மாணவர்களுக்கு மிகப் பெரும் அநீதியொன்று இழைக்கப்பட்டதை அவதானித்தேன்.
அதாவது 2007 ஆம் ஆண்டு அரசினால் வைத்தியப் பீடத்துக்கான மாணவர் அனுமதி வழமையான எண்ணிக்கையை விட ஏறக்குறைய 250ஆல் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த அதிகரிப்பானது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அந்தந்த மாவட்ட சனத்தொகை விகிதாசாரத்த்துக்கேற்ப பகிரப்படல் வேண்டும்.
அத்தீர்மானத்தின்படி 10 மாணவர்கள் யாழ் மாவட்டத்தில் இருந்தும் தெரிவாகி இருத்தல் வேண்டும். ஆனால் அந்த அதிகரிப்பு யாழ்பாண மாவட்ட வைத்திய துறை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டது.
மாணவர் தெரிவு முறையில் ஏறக்குறைய 55 வீதமான மாணவர்கள் 25 மாவட்டத்திற்குரிய சனத்தொகை விகிதாசார கோட்டா முறையில் தெரிவுசெய்யப்படுவர் ஆனால் யாழ்ப்பாண மக்களின் சனத்தொகை எண்ணிக்கை நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தம் காரணமாக வருடாவருடம் குறைந்து கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் ரிச்சட் பத்திரண உயர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் யாழ் மாவட்ட சனத்தொகையில் தொடர்ச்சியான குறைவு ஏற்படுவதனால் 2000ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பை நிலையாகப் பேணுதல் என்று ஒரு அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டு இருந்தது.
அந்த அமைச்சரவை தீர்மானத்தை காண்பித்து மாணவர் அனுமதிக்கு பொறுப்பாக இருந்த திரு புஷ்பகுமார என்பவரோடு நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது. குறித்த யாழ் மாணவர்களை உள்ளீர்த்தல் வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
இவ்விடயத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் எனது அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவின் கவனத்திற்கும் கொண்டு வந்தேன். யாரும் எனது கருத்தை ஏற்கவும் இல்லை, உடன்படவுமில்லை. எனது கோரிக்கையை உதாசீனம் செய்தனர். 10 வைத்தியபீட மாணவர்களின் அதிகரிப்பை முற்றாக மறுத்து விட்டனர்.
விவாதம் முற்றிய நிலையில் உயர்கல்வி அமைச்சுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் எதிராக நீதிமன்றம் சென்று யாழ் மாணவர்களுக்கு ஆதரவாக சாட்சியம் கூறுவேன் என தெரிவித்துவிட்டு வெளியேறினேன்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் ஏற்கனவே என்னுடன் இந்த விடயம் சம்பந்தமாக தொடர்பை ஏற்படுத்தியிருந்த இலங்கை கம்பன் கழக உறுப்பினர்களோடு பேசி குறித்த அமைச்சரவை தீர்மானத்தை பிரதான வாதமாக மன்றில் சமர்ப்பித்து குறித்த 10 மாணவர்களுக்கான அனுமதியை பெற்றுக்கொடுக்க வழிகாட்டினேன்
அதன் பிரகாரம் நீதிமன்றம் மாணவர்கள் சார்பான கோரிக்கையை சரிகண்டு அவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதியை வழங்குமாறு உடனடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இன்று அந்த மாணவர்கள் அனைவரும் வைத்தியர்களாக உருவாகி இந்த நாட்டிற்கு மிகப் பெரும் சேவையினை வழங்குவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் அரசாங்கத்தின் உயர் கல்வி பிரதி அமைச்சராக இருந்தபோதிலும் என்னுடைய அமைச்சை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்த இந்த வழக்கு விவகாரம் தொடர்பில் எனது நோக்கம் இன மத பேதம் கடந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாகவே இருந்தது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தொடரும்…
கருத்துக்களேதுமில்லை