அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விலகிக்கொள்ளவும் – தொழிற்சங்கம்.

வி.சுகிர்தகுமார்

  அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அம்பாரை மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களை கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அம்பாரை மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது தொடர்பிலான கடிதம் ஒன்றினையும் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கொவிட் 19 காரணமாக தொழிலை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா இரண்டாம் கட்ட கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காத்திருப்பு பட்டியல் மற்றும் தொழில் பாதிப்பு, மேன்முறையீடு செய்த குடும்பங்கள் சமுர்த்தி வங்கியில் அங்கத்தர் அல்லாத கணக்கொன்றை திறக்க வேண்டும் என திணைக்களம் சுற்றுநிருபம் மூலம் கேட்டுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது உயிரையும் துச்சமென நினைத்து இரவு பகலாக பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையில் ஈடுபட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் குறித்த கணக்கினை திறக்கும் மேலதிக பணியை நிறைவேற்ற முடியாது என எமது தொழிற்சங்கம் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் 18ஆம் திகதி அறிவித்துள்ளது.

அத்தோடு மறு அறிவித்தல்வரை குறித்த கணக்கு ஆரம்பிக்கும் பணியில் இருந்து விலகிக்கொள்ளுமாறும் தலைவர் ஜ.எச்.வஹாப் செயலாளர் டி.எம்.சமந்த திசாநாயக்க ஆகியோரால் ஒப்பமிடப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் சகல சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.