கடமைக்கு காலதாமதமாக வருகைதந்த ஊழியர்களுக்கு பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கடமை நேரத்துக்குப்பின் வந்த காரணத்தினால் அவர்களை பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து அவர்கள் வைத்தியசாலை நிர்வாகப் பிரிவின் முன் ஆர்ப்பாட்டத்தில் இன்று வியாழக்கிழமை (21) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலநறுவை மாவட்டத்தைச் சோந்த சுமார் 350 ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் தினமும் கடமைக்காக வைத்தியசாலைக்கு பஸ்வண்டியில் வந்து செல்லுகின்றனர். இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்கள் வீடுகளுக்கு சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக விசேட போக்குவரத்துக்கான பஸ்வண்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (21) பொலநறுவையில் இருந்து குறித்த நேரத்தின் பின்னர் கடமைக்கு வந்த ஊழியர்களை வைத்தியசாலை நிர்வாகம் பதிவேட்டில் கையெழுத்து வைக்க அனுமதி வழங்கவில்லை.
இதனை எதிர்த்து குறித்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டதுடன் வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததுடன் ஆர்ப்பாட்டகாரருடன் பேச்சுவார்த்தை நடாத்தி இனிமேல் குறித்த கடமை நேரத்துக்கு வரவேண்டும் என தெரிவித்து அவர்களுக்கு இன்று ஒரு அவகாசம் வழங்கி பதிவேட்டில் கையொப்பம் இட அனுமதித்ததோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து தமது கடமைகளுக்கு சென்றனர்.
கருத்துக்களேதுமில்லை