நாடாளுமன்றைக் கலைத்தமையை சவாலுக்குட்படுத்தி ஐ.தே.க. அதிரடி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சார்பில் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்,  அரசமைப்புக்கு அமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்படல் வேண்டும் எனவும், அதன்படி ஜனாதிபதியால் கடந்த மார்ச் 2ஆம் திகதி  நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஏப்ரல் 25 இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் திகதி ஜூன் 20 எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது அரசமைப்பை மீறும் நடவடிக்கை எனவும், அதனால் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானியை வலுவற்றது என அறிவிக்குமாறும் அகிலவிராஜ் காரியவசம் தனது மனுவில் கோரியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.