கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1055 ஆக உயர்வு

இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 604 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 442 பேர் அங்கொட தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலை, உள்ளிட்ட்ட பல வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 139 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் விஷேட குழு, அதன் ஆரம்பகட்ட விசாரணைகளை தொடர்ந்து அளித்த பரிந்துரைகள் பிரகாரம், தர்போது வெலிசறை முகாமைச் சேர்ந்த அனைத்து கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெலிசறை முகாமிலிருந்து அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாயிரத்து 193 கடற்படையினர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி சவேந்ர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.