பொதுத் தேர்தலை நடத்த முடியும் – உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இதன்போதே ஜனாதிபதி ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியோர் குணமடையும் வீதம் அதிகரித்துள்ளமை மற்றும் மரண வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளமை ஆகியன இலங்கையில் கொரோனா வைரஸ் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சுகாதார நடைமுறைகளை எதிர்வரும் காலங்களிலும் பின்பற்றுதல் அவசியம் எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் ஒழிப்பிற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்று எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என்பதால் அந்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன் வைக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரீட் கட்டளையை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்