கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அண்மையில் 400 கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர்.

அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் 99 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் நேற்று வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் ஆறு பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஆறு பேரும் வெலிகந்த மருத்துவமனைக்கு சற்று முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெலிசறையில் இருந்து அழைத்துவரப்பட்ட ஏனைய கடற்படையினரில் 40 பேருக்கான பரிசோதனைகள் இன்று  இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.