கொடுப்பனவு நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சியே காரணம் என்கின்றார் பிரதமர்

கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவிடம் எதிர்கட்சிகள் மனுத்தாக்கல் செய்த காரணத்தினாலேயே கொடுப்பனவு நிறுத்தப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த பிரதமர், எவ்வாறாயினும் இந்த கொடுப்பனவு வழங்குவதை முற்றாக நிறுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என தொலைக்காட்சியில் தெரிவித்துக்கொண்டே நிவாரணங்களை நிறுத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யும் எதிர்கட்சிகள் நாட்டில் உள்ளன என பிரதமர் குற்றம் சாட்டினார்.

கடந்த அரசாங்கம் நாடு மேலும் மேலும் நெருக்கடிக்குள் சிக்கவேண்டும் என்றும் மக்கள் குறித்து அவர்களிற்கு அக்கறையில்லை என்றும் தெரிவித்த பிரதமர் அவர்கள் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து மாத்திரமே கனவுகாண்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்கள் கொடுப்பனவை நிறுத்துவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் திட்டங்கள் வெறும் கனவாகவே முடியும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு அமைய ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார்.

இருப்பினும் தங்கள் கொடுப்பனவினை நிறுத்துமாறு எங்கும் தெரிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.