கிழக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் ஜனாதிபதி செயலணி
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர் என்றும் இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி அவற்றை பாதுகாக்கும் விரிந்த நிகழ்ச்சித்திட்டமொன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒன்றுகூடும் பௌத்த ஆலோசனை சபை இரண்டாவது தடவையாக நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. இங்கு மகாசங்கத்தினரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாத்து ஜனாதிபதி மேற்கொண்டுவரும் பணியை மகா சங்கத்தினர் பாராட்டினர்.
ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எந்தவொரு கொரோனாத் தொற்றுடையவரும் கண்டறியப்படாமை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என ஜனாதிபதி மகாசங்கத்தினரிடம் தெரிவித்தார்.
இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை கல்வித்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு சில காலகட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர். தனது கொள்கை பிரகடனத்தில் முதன்மையான இடத்தையும் முன்னுரிமையையும் கல்விக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடெங்கிலும் பரவியுள்ள போதைப் பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மகாசங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் மகாசங்கத்தினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த குறுகிய காலப்பகுதியில் நாட்டினுள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்களை கைப்பற்ற முடிந்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்தி போதைப் பொருள் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாகவும், அதற்காக திறமையும் இயலுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். புலனாய்வுத் துறையை பலப்படுத்தி முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து தீவிரவாத, பயங்கரவாத குழுக்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். படைவீரர்கள் நினைவு தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்க அகராதியில் வார்த்தைகள் இல்லை எனக் குறிப்பிட்ட மகாசங்கத்தினர், அதனையிட்டு ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர்.
குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மகாசங்கத்தினருக்கு பாரிய பொறுப்பு உள்ளது என தேரர்கள் சுட்டிக்காட்டினர். தேரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் விதமான ஊடக நடத்தையை மகா சங்கத்தினர் விமர்சித்தனர்.
உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டும் போது எதிர்க்கட்சி நேர்மையற்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் எதர்ப்பது வெறுக்கத்தக்கதாகும் என்றும் தேரர்கள் சுட்டிக்காட்டினர்.
கொரோனா த்தொற்றினால் குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மகாசங்கத்தினருக்கு பாரிய பொறுப்பு உள்ளதுடன், அதற்காக பிக்குமார்களை கொண்ட குழுவொன்றை விரைவில் நியமித்து உரிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கருத்துக்களேதுமில்லை