கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்
கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு வேளைகளில் இனந்தெரியாத நபர்களால் பெருமளவு கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் குறித்த காணியில் குப்பைகள் தேங்கி காணப்படுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் கல்முனை மாநகர சபை சீராக திண்மக்கழிவுகளை அகற்றி வந்தபோதிலும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவரே அதற்கு தடையாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாநகர சபை உறுப்பினர் அப்பகுதி மக்களுக்கு கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவிற்கென அறவிடப்படும் 50 ரூபாயை வழங்க வேண்டாம் என தெரிவித்த நிலையில், கல்முனை மாநகரசபையினால் அப்பகுதியில் தற்போது கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த மாநகர சபை உறுப்பினர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், “மாநகர சபை உறுப்பினர் இன நல்லுறவை சீரழிக்கின்ற நாசகாரச் செயல்களை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றார்.
இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கடையே முறுகல் நிலைகளையே ஏற்படுத்தும். இவ்வாறான செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் அவர் தனது செயற்பாடுகளை மாற்ற முன்வர வேண்டும்” என குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை