சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு அம்மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் மாவட்ட பொது வைத்தியாசலைகள், பிரதேச வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பொன்று வடக்கு ஆளுநர் செலயகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் வட. மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் முகங்கொடுக்கும் சவால்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பட்டியலை முன்வைத்தனர்.

அவ்விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய ஆளுநர், வைத்தியசாலைகளில் உள்ள விடுதிகள், கழிப்பறைகள் மற்றும் பிறபகுதிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அனைத்து வைத்தியசாலை சுற்றுச்சூழலின் தூய்மையைப் பேணுவதற்கான வழிமுறைகள் வெளியே கொணரப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “நோயாளிகளுக்கு வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து பட்டியலுக்கு அமைவாக உரிய உணவுகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும் . இதற்காக சுகாதார அமைச்சால் வருடாந்தம் பாரியளவு நிதியும் ஒதுக்கப்படுகின்றது.

மேலும் வெளியில் இருந்து வைத்தியசாலைகளுக்குள் உணவைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். இமக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் மருத்துவமனைகளில் குடிநீர், கழிப்பறைகள் மற்றும் படுக்கைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

வைத்தியசாலைகளில் வசதியான தங்குமிடம் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி முறையான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த சரியான கண்காணிப்பு முறையை செயற்படுத்த வேண்டும்.

வைத்தியசாலைகளின் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோது வரவுசெலவு திட்டத்தினை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

சமூகத்தில் பரவும் தொற்று, தொற்றா நோய்கள் சம்பந்தமான தகவல்களை திரட்டி தகவல் மையத்தின் ஊடாக அவை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன் அவை குறித்த உரிய கண்காணிப்புக்களை பிரதேச வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் தரவுகளைப் பதிவு செய்வதற்காக மாவட்ட செயலக, பிரதம செயலாளரின் அலுவக ஆளணியினரை பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஆளுநரின் இந்த முன்மொழிவுகள் சுகாதாரத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமெனவும்  உறுதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.