அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கு தொலைபேசிகள்!

ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்  வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, அவர் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த தொலைபேசிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும் பௌதிகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் பு.ரவிராஜன் மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொவிட் 19 பரவலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் உலகளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி முறையினூடாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இணையவழிக் கற்றல் வசதிகள் குறித்து மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தொலைபேசி வசதிகள் இல்லாத மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அனுசரணையாளர்களின் மூலம் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, பேராசிரியர் சிவா.சிவானந்தன் 100 தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்ததையடுத்து, பீடாதிபதிகளின் சிபாரிசுக்கமைய வசதி குறைந்த மாணவர்களுக்கு இந்தத் தொலைபேசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர் விருதான ‘மாற்றத்துக்கான சாதனையாளர்’ விருது பெற்ற ஈழத்தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன், தனது சிவானந்தன் ஆய்வு கூடத்தின் ஊடாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் சூரிய சக்தி ஆய்வுக்காக பல வழிகளிலும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.