கொரோனா குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் சமூகத்தில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் இல்லை என்ற உறுதியை வழங்குவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதும் சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் இல்லை என்று உறுதிப்படுத்த முடியாது என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர் ஒருவர் இருந்தாலும் அவர் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மீண்டும் அனைவரும் தங்களின் கடமைகளுக்கு திரும்புவதுடன், மக்கள் ஒன்று கூடுவது அதிகரிக்கும்.
எனவே, நாட்டில் கட்டுப்பாட்டு நிலை தளர்த்தப்பட்டுள்ளபோதும் கைகளை கழுவுதல், சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை