யாழில் இராணுவத்துடன் முரண்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உரும்பிராய் பகுதியில் நேற்று இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உரிய முறையில் முகக்கவசம் அணியாதிருந்தனர். அதனை சரியான முறையில் அணியுமாறு இராணுவத்தினர் கூறிய போது இரு தரப்புக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் அங்கிருந்து பயணிக்கும் போது இராணுவத்தினரை நையாண்டி செய்ததாகத் தெரிவித்து துரத்திச் சென்ற இராணுவத்தினர், வழிமறித்துத் தடுத்தனர். மூவர் மீதும் இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மூவரும் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் சான்றுப்பொருளாக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபர்கள் மூவரை நாளைமறுதினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் மூவரும் இராணுவத்தால் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் போது இராணுவத்தைத் தாக்கியதாக நேற்று செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை