தேர்தலின் பின் ஐக்கியக் தேசியக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்! – அடித்துக் கூறுகின்றது மஹிந்த அணி
“ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் தற்போது புறக்கணித்து வருகின்றார்கள். இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக இந்தக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் பின்னரே ஊரடங்குச் சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.
5000 ஆம் ரூபா நிவாரண நிதி மக்களுக்கு அரசியல் கட்சி வேறுபாடு இன்றி வழங்கப்பட்டுள்ளது. எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்கு இந்த நிவாரண நிதி விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன செயற்பட வேண்டும்.
நாட்டில் எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற விதமாகச் செயற்பட்டால் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் நிலை இல்லாமல் போகும். இது அரசு சர்வாதிகாரமாகச் செயற்படுவதற்கும் காரணமாக அமையும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை