நாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம்

நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தொல்லியல் துறை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். “கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இவ்விடயம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பொதுத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இவ்வாறான நியமனங்கள் செய்யப்பட முடியுமா? எந்தவொரு நியமனமும் இக்காலத்தில் செய்யப்பட முடியாது என்பதே பொதுவான விதியாகும். காரணம் அது வாக்காளரைக் கவர்வதற்கான அனுமதிக்கப்பட முடியாத ஒரு செயல் என்பதும், இவ்வாறான விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாதிருக்கும் என்பதுமேயாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்விடயங்கள் தொடர்பாக மிகவும் அலட்சியமாக, சட்டங்களை மதிக்காத வகையில் அல்லது அசட்டைத் துணிவோடு, குறிப்பிடப்பட்ட இக்காலத்தில் செய்யப்பட முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்தவண்ணமே இருக்கின்றார்.

தொல்லியல் இடங்கள் தொடர்பான விடயங்கள் தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால் இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத்தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டு வருகின்றது.

உண்மையில், மிகவும் அவதானத்தோடும் நிதானத்தோடும் உண்மையைக் கண்டறியும் இத்துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும்.

இவ்வகையில் இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுனர்களாக இருக்க வேண்டும் என்பதும் முதன்மையான விடயமாக இருக்க வேண்டிய அதேவேளை, இலங்கையின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் இடம்பெறுதலும் அத்தியாவசியமானதாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.