யாழில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பங்குனி மாதம் 20ஆம் திகதி கோரோனா பிரச்சினையினால் நாடு முடக்கப்பட்ட நிலையில் அஞ்சல் திணைக்களத்தின் சகல சேவைகளும் முடக்கப்பட்டிருந்தது. அந்த சேவையானது ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது.

50 வீத ஊழியர்களின் பங்களிப்போடு திணைக்களங்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க எங்களால் குறித்த சேவையானது மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுக்கப்பட்டன.

அந்த மட்டுப்படுத்தப்பட்ட சேவையானது மே மாதம் 18ஆம் திகதி வரை வழங்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கான இயன்றளவு சேவையும் அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

மே 18ஆம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்ட எமது திணைக்களத்தின் சேவையானது, இன்றிருந்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

வழமையாக ரயில் மற்றும் பேருந்து மூலம் எமது தபால் பொதிகள் வேறு மாவட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டது.

எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது திணைக்களத்தின் வாகனத்தின் மூலமே ஒரு கிழமைக்கு இரண்டு தடவைகள் தபால் பொதிகள் கொண்டுவரப்பட்டு, அவை இங்கே மக்களுக்கு உரிய முறையில் சேர்ப்பிக்கப்பட்டன.

எனினும் தற்போது அரசாங்கத்தின் அறிவிப்பிற்கிணங்க, எமது சேவையானது முற்றுமுழுதாக ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து சேவைகளும் இன்றிலிருந்து இடம்பெறும்” என அவர்தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.