ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இலங்கை மக்களுக்கு பேரிழப்பு- தமிழக முதலமைச்சர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் எனக் கூறியுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இலங்கைக்கு பேரிழப்பு என்றும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அந்நாட்டின் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் திடீரென காலமான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த தொண்டமானின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை