அஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கு தேவையான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற தேர்தல் 2020 அரசியல்வாதிகள், முன்னாள் ஆளுநர்களுக்கான மெய் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தல் எனும் தலைப்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்

அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஆளுநர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக செயற்படும் எம்.அஸாத் சாலிக்கு வழங்கப்பட்டிருந்த மெய் பாதுகாப்பு கடந்த 2019.11.30 ஆம் திகதியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

முன்னாள் ஆளுநர்களுக்கு தற்போதும் மெய் பாதுகாப்பாளர்கள் வழங்கப்படுகின்றன நிலையில், முன்னாள் ஆளுநர், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான எம்.அஸாத் சாலிக்குரிய மெய் பாதுகாப்பாளர்கள் நீக்கியமை உசிதமான காரியமல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

அதனால் அவருக்கு மீண்டும் போதுமான மெய் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியாது எனின் அது தொடர்பான காரணங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அனுப்பி தேர்தல்கள் ஆணைக்குழுவை அறிவுறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கடிதத்தின் பிரதி ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் எம்.அஸாத் சாலிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்