ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் – சி.வி.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். புதிய இந்தியத் தூதுவரைச் சந்தித்து வந்து சில மணித்தியாலங்களில் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆறுமுகம் பல தடவைகள் என்னைக் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணம் வரும்போது முடியும் போதெல்லாம் என்னை வந்து சந்திப்பார். அவர் என்னை அரசியல்வாதி என்ற ரீதியில் சந்திப்பதைவிட தனது பாட்டனாரின் நண்பர் என்ற முறையிலேயே வந்து பலமுறை சந்தித்ததுண்டு.

காலக்கிரமத்தில் அவர் தம் பணியை உணர்ந்து மலையக மக்களுக்கு ஒரு வலுவான தலைவராகத் திகழ்ந்தார். பாட்டனாரின் வழியில் அவர் அவர்களை திறம்பட வழி நடத்தி வந்து, சடுதியாக எம்மைவிட்டுப் பிரிந்தமை மலையக மக்களுக்கும் எமக்கும் மிகுந்த துயரையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மலையக மக்களின் தலைமைத்துவத்தில் ஒரு பாரிய இடைவெளி தெரிகின்றது. தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சவாலான கால கட்டமான இத்தருணத்தில் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு ஒரு பேரதிர்ச்சியாக உணரப்படுகிறது. அவரின் வெற்றிடம் விரைவில் தக்கவரால் நிரப்பப்பட வேண்டும்.

ஆறுமுகம் குடும்பத்தினருக்கு எனது உளமார்ந்த துக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முக்கியமாகத் தம்பி செந்தில் தொண்டமானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆறுமுகம் தொண்டமானின் ஆத்மா இறையடி சேர்வதாக” என அந்த அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.