யாழில் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

யாழில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டஅரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வாரம் அம்பன் சூறாவளியினால், கடந்த 21ஆம் திகதி மற்றும் அதற்கு பிற்பாடும் தொடர்ச்சியாக யாழ். குடாநாட்டில் காற்றின் தாக்கம் அதிகரித்திருந்தது.

அதன் அடிப்படையில் சுமார் 130 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளை முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

அவர்களுடைய விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு முற்பணமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 7 குடும்பங்களைத் தவிர அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான குறிப்பாக வாழை, பப்பாசி செய்கையாளர்களுக்கும் அவர்களுடைய இழப்பை நாங்கள் மதிப்பீடு செய்து அவற்றை நாங்கள் விவசாய அமைச்சுக்கும் துறை சார்ந்த பிரிவுகளுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பியுள்ளோம்.

இழப்பு தொடர்பாக நாங்கள் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கின்றோம். குறித்த இழப்புக்கள் தொடர்பாக எமக்கு ஏதாவது பணிப்புரை வழங்கப்படுமிடத்து உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.