எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்!

நக்கீரன்

ழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரன்  சிங்கள ஊடகம்  ஒன்றுக்குச்  சிங்களத்தில் கொடுத்த நேர்காணல் பற்றிய வாதம், எதிர்வாதம் நின்ற பாடில்லை.

Colombo Telegraph என்ற இணையதளத்தில்  ததேகூ பேச்சாளர் சுமந்திரன் ததேகூ இல் இருந்து உடனடியாக விலக வேண்டும் (TNA Spokesperson Sumanthiran Should Resign From The TNA Immediately) என்ற தலைப்பில் மனோன்மணி சதாசிவம் ஒரு நீண்ட, நெடிய கட்டுரை ஒன்றை  எழுதியுள்ளார். கொழும்பு தெலிகிறாவ் என்ற இணையதளம் எல்லாவிதமான கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் ஒரு இணையதள ஊடகம். தமிழ்சார்பான, தமிழ் எதிர்ப்பான கட்டுரைகள், கருத்துக்கள் அதில் வெளிவரும். கட்டுரைகள் பற்றி எழும் விமரிசனத்துக்கு கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்று சொல்லலாம்.

மனோன்மணி சதாசிவம் பற்றிய அறிமுகத்தில் அவர்  ஒரு  சட்டத்தரணி என்றும்  சிறிலங்கா, வவுனியா மாவட்ட  மற்றும்  வவுனியா குற்றவியல் நீதிமன்ற பதில் நீதிபதியாகவும் (Magistrateஇருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும்  அவர் ஒரு மனிதவுரிமை செயற்பாட்டளர் என்றும் பல  ஆட்கொணர்வு வழக்குக்களைத்  தாக்கல் செய்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று யாராவது தன்னைப்பற்றி  விளம்பரப்படுத்த விரும்பினால் அப்படிப்பட்ட ஒருவர் சுமந்திரனுக்கு எதிராக (1) அறிக்கை விட வேண்டும் (2) பகிரங்கக் கடிதம் எழுத வேண்டும் (3) அவரது கொடும்பாவியை எரிக்க வேண்டும். வேறு வழியில்லை.

மனோன்மணி அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில் சுமந்திரனுக்கு மனிதவுரிமை பற்றி ஒன்றுமே தெரியாது, பன்னாட்டுச்  சட்டம் பற்றிய அறிவு அவருக்கு அறவே கிடையாது, அவருக்கு இனச் சுத்திகரிப்பு – இனப்படுகொலை இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது,   உண்மையில் அவர் எப்போதுமே கொழும்பைத் தளமாகக் கொண்ட ஒரு பண ஆசை கொண்ட வணிக வழக்கறிஞராக இருந்தார், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர்  கவலைப்பட்டது கிடையாது (In fact, he always remained a money-minded commercial lawyer based in Colombo and never cared about the lives of the Tamils in the North and East).

மனோன்மணி அவர்களது கருத்து அபத்தமானது. அருவருக்கத்தக்கது. அவரது மொழிநடை வெறுக்கத்தக்கது. சுமந்திரன் ஒரு வணிக வழக்கறிஞர் என்று சுயபுத்தியுள்ள எவனும் சொல்ல மாட்டான்.

மனோன்மணி தனது வாதத்துக்கு வலுச் சேர்க்கப் பலரது அறிக்கைகளை மேற்கோள் காட்டுகிறார். ஆனால் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் தலைவர்  இரா சம்பந்தன் விடுத்த அறிக்கையை அவர் வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டார்.

சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுக்களை அடுக்கலாம். ஆனால் அவருக்குச் சட்டம் தெரியாது, பன்னாட்டுச் சட்டம் தெரியாது,  வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர்  கவலைப்பட்டது கிடையாது என்று குற்றம்சாட்டுக்கள் அடிப்படையில்லாதவை.

அரசியலமைப்பு தொடர்பான சிவில் வழக்குகள் பேசுவதில் சுமந்திரன் இன்ற முதல் இடத்தில் இருக்கிறார்.

சமந்திரன் 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  மக்களின் அமோக ஆதரவோடு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்.  யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 58,044 விருப்பு வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தவர். அவர் ததேகூ இல் இருந்து விலக வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும் என்பதில் பொருள் இல்லை.

இப்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் சனாதிபதி கோட்டாபய  இராசபக்சவின் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் யூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை  நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் களான புவனேக அலுவிகாரே, சிசிடி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெற்று  வருகிறது. எட்டாவது  நாளாக இன்று காலை 10 மணியளவில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. நேற்று  (வியாழக்கிழமை)  3 மணி நேர விசாரணையை அடுத்து அது 8ஆவது தட வையாக நாளை வரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சட்டமா அதிபர் உட்பட  ஏழு மனுதாரர்கள்  தாக்கல் செய்துள்ளார்கள். அதில்  மனுதாரர்கள்  சரிதா குணரத்தின மற்றும் விக்டர் ஐவன் சார்பாக  சனாதிபதி சட்டத்தரணி  சுமந்திரன்  தோன்றி வாதாடி வருகிறார். கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இந்த  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சுமந்திரன்தான் தொடக்க வாதத்தை முன்வைத்தார். வழக்குகளின் விசாரணை முடிவில்  தொகுப்புரையையும் சுமந்திரனே ஆற்ற இருக்கிறார்.

2018 ஒக்டோபர் 26 அன்று சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம மந்திரியைத் திடீரெனப் பதவி நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக, 2015 யனவரியில் இடம் பெற்ற சனாதிபதித் தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட,   பரந்தளவில்   முறைகேடுகளுடன் தொடர்புபட்ட முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சவை நியமித்த போது  இலங்கை ஒரு அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள்  தள்ளப்பட்டது.   அரசியல் கட்சிகளால் நாடாளுமன்றத்தில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரிக்கை விடுக்கப்பட்டதும் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து 2019 ஜனவரி 5 ஆம் திகதி புதிய தேர்தலை நடத்த அழைப்பு விடுத்தார். இந்நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில்  சம்பந்தன் தாக்கல் செய்த வழக்கில் அவர் சார்பாக சுமந்திரன் தோன்றி வாதிட்டார். நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என உயர் நீதிமன்றம் ஒரு வாரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்ப்பை வழங்கியது.

இந்த இரண்டு வழக்குகளுமே  இன்று இலங்கையில்  அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஒரு திறமையான வழக்கறிஞர் என்பதை எண்பித்துள்ளது. 

இனி,  சுமந்திரன்  சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த (Chamuditha Samarawickramaஅளித்த நேர்காணல் பற்றிப் பார்ப்போம். இருபத்தொரு மணித்துளிகள் நீடித்த இந்த நேர்காணலில் சுமந்திரனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

சமுதித்த: தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்ன?

சமுதித்த: தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பகுதியா?

சமுதித்த: தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தைக் கூட்டியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

சமுதித்த: பிரபாகரன்தான் தமிழ் தேசியக் கூட்ட மைப்பை உருவாக்குகிறார். அதில் சம்பந்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சமுதித்த: நீங்கள் சொல்ல வருவது விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாகவில்லை என்றா?

சமுதித்த: தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது 7 கட்சிகள் இருந்தன. இப்போது இருப்பது மூன்று மட்டுமே. புளொட் – டெலோ மற்றும் தமிழரசுக் கட்சி மட்டுமே இப்போது இருக்கின்றன.

சமுதித்த: ஆனந்தசங்கரி அவர்களும் இந்தக் கட்சியில் இருந்தார்கள். பாசிசவாதிகளோடு என்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்றே அவர் வெளியே சென்றார்.

சமுதித்த: விக்னேஸ்வரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அப்படி வெளியேறிய அனைவரும் உங்கள் மேல்தான் குற்றம் சுமத்துகிறார்கள்.

சமுதித்த: அவர்கள், உங்கள் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் வாலில் தொங்க வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.

சமுதித்த: சரியாக சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான தலைவர் எம் ஏ சுமந்திரனா? அல்லது சம்பந்தனா?

சமுதித்த : சமஷ்டிஎன்பது இன்னொரு நாடு. சமஷ்டி என்றதும் நாடு பிரிந்தது என்றுதான் அர்த்தம்?

சமுதித்த – எம்.ஏ.சுமந்திரன் இனவாதியா?

இந்கக் கேள்விகளும் இதுபோன்ற கேள்விகளும் சுமந்திரனை ஒரு புலி  முகவராகவும்  இனவாதியாகவும் காட்ட கேட்கப்பட்ட  கேள்விகளாகும்.

ஆனால் சர்ச்சைக்கு உள்ளான கேள்வி – பதில்  பின்வருமாற அமைந்திருந்தது.

சமுதித்த: நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

சுமந்திரன்: இல்லை. நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

சமுதித்த: ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை

சுமந்திரன்: நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன். ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்கிறேன். அதனால் எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. அவர் எங்களுக்காகத்தானே போராடினார்கள், ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை என்று என்னோடு முரண்படுகிறார்கள். அதற்கு காரணம் நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்லன் என்பதுதான்.

இந்த இரண்டு கேள்விகளையும் அதற்கான பதில்களையும் படித்து விட்டுத்தான் சுமந்திரன் வி.புலிகளைக் கொச்சைப்படுத்திவிட்டார், ஆயுதப் போராட்டத்தை அவமதித்துவிட்டார் எனப் பலர் சன்னதம் ஆடினார்கள்.

ஒன்று இந்த நேர்காணல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களோடு நடாத்தப்பட்ட கேள்விகளாகும். தமிழ் அரசுக் கட்சியின் அல்லது தமிழ்த் தேசியக் கட்சியின் பேச்சாளர்  என்ற முறையில் சுமந்திரன் அறிமுகப்படுத்தப் படவில்லை.

நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்லன் என்பதுதான் சுமந்திரனின் நீண்டகால நிலைப்பாடுஅது அவரது தனிப்பட்ட கருத்துரிமை. போராட்டம் தவறு என்று அவர் சொல்லவில்லை. வி.புலிகளின்  தியாகங்களை கொச்சைப் படுத்த முடியாது. கொச்சைப் படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் உயிர்களைத் தங்களுக்காக அல்ல எங்களுக்குக்காக தியாகம் செய்திருக்கிறாகள். அதனை நான் மதிக்கிறேன். ஆனால்  வாக்குப் பெறுவதற்காக பயன்படுத்த மாட்டேன். 

தமிழ் அரசுக் கட்சியின் நீண்டகால வரலாற்றில் எந்தச் சந்தர்ப்பத்திலும் வன்முறையை ஆதரித்தது கிடையாது. 1956 இல் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மீது சிங்களக் காடையர் தாக்குதல் நடத்தியபோது யாரும் திருப்பித் தாக்கவில்லை. தந்தை  செல்வநாயகம் தமிழர்களது போராட்டங்கள் அறவழியில், அகிம்சைக் கோட்பாட்டுக்கு அமைய இருக்க வேண்டும் என்று சொன்னார். அதன் காரணமாகவே அவர் “ஈழத்துக் காந்தி” எனப் போற்றப்பட்டார்.

சுமந்திரனின் சிங்கள நேர்காணலை படித்துப் பார்த்துவிட்டு சம்பந்தன் என்ன சொன்னார்?

சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும்  (forthright and frank) செயற்பட்டுள்ளார் எனச் சொன்னார்.

அகிம்சை வழியில் பற்றுறுதிகொண்டிருந்த தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது. 2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம்  தொடர்ந்தது.

நீதிமற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன் அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார். சிலவிடயங்கள் மீது அவர் தனதுசொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்” என இரா சம்பந்தன் தனது அறிக்கையல் குறிப்பிட்டுள்ளார்.  (https://www.colombotelegraph.com/index.php/sampanthan-defends-sumanthiran-says-sumanthiran-has-been-frank-and-forthright/)

இருபத்தேழு  ஆண்டு கால அகிம்சைப் போராட்டம் வெற்றியளிக்கவில்லை. 26 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் வெற்றியில் முடியவில்லை. எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம். அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.