குவைத்திலிருந்து வந்தவர்கள் வெடிகுண்டுகள்: மஹிந்தானந்தவின் கருத்துக்கு ஹந்துன்நெத்தி கடும் கண்டனம் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குக் கடிதமும் அனுப்பிவைப்பு

குவைத்திலிருந்து இம்மாதம் 19ஆம் திகதி இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமையானது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்குச் சமமானது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ள கருத்து கவலைக்குரியது என்று தெரிவித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“குவைத்திலிருந்து இலங்கைக்கு இம்மாதம் 19 ஆம் திகதி வருகை தந்த இலங்கையர்கள் குவைத் அரசால் தெரிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்றும், அவர்களுடைய வருகையானது இலங்கைக்குக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு ஈடானது என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 25 ஆம் திகதி தெரிவித்த கருத்து கவலைக்குரியதாகும். அத்தோடு அந்தச் சந்தர்ப்பத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பல அடிப்படையற்ற போலியான குற்றச்சாட்டுக்களாகும் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.

குறிப்பாக இவ்வாறு குவைத்திலிருந்து வந்தவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நபர்கள் என்றும், குறித்த நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். குறித்த 467 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் நால்வர் அங்கு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் தம்மை நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது நீங்கள் அறிந்த விடயமாகும்.

எனினும், அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசால் தயக்கம் காண்பிக்கப்பட்டமையால் தற்போது இவ்வாறான தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வெளிநாட்டு அரசுகளை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இவ்வாறான நிலையில் வெவ்வேறு நாடுகளிலும் சிக்கித் தவிக்கின்ற இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதை நிறுத்துவதற்கும் அரசு முயற்சிக்கின்றது. எனவே, எம்மால் குவைத் கிளைக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவுபடுத்தல் உங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தவொரு அரசும்  தயாராகவுள்ளது. அந்தப் பொறுப்பைக் கைவிட்டு பாதிக்கப்பட்டுள்ள பிரஜைகள் மற்றும் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருதல் என்பவற்றுக்காக வெவ்வேறு ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற அரசுகளுக்கு இலங்கை அரசின் உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நாம் அதிருப்தி தெரிவிக்கின்றோம்.

மிகுந்த உடல் நலத்துடனேயே மேற்கூறப்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வந்தனர். எனினும், கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணிகளினாலேயே அந்த அரசுகள் இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பத் தீர்மானித்துள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற இலங்கையர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு நாம் கோருகின்றோம்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்