தொண்டமானின் இழப்பு அனைத்து சிறுபான்மை மக்களின் இழப்பாகும் – சந்திரகுமார்

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கான இழப்பு மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மை மக்களின் இழப்பாகுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகம் தொண்டமானின் இறப்பு தொடர்பாக இரங்கல் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மு.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக மலையக மக்களின் நலன்களுக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் உரிமைகளுக்கும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த ஆறுமுகம் தொண்டமானின் மரணம் பேரதர்ச்சியை தந்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வழியில் அரசியலை முன்னெடுத்தவர் ஆறுமுகம் தொண்டமான்.

மலையக அரசியலில் ஏற்பட்ட புதிய போக்குகளில் இ.தொ.கா.பலத்த சவால்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. அந்தச் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஆறுமுகம் தொண்டமானுக்கும் இருந்தது.

அதேவேளை இலங்கை தேசிய அரசியலில் புதிய போக்கும் ஆறுமுகம் தொண்டமானின் அரசியலில் சவால்களை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் இரட்டைச் சவால்களுக்கு முகம் கொடுத்து தன்னுடைய அரசியலை முன்னெடுக்க வேண்டிய சூழலில் ஆறுமுகம் தொண்டமான் இருந்தார். இந்த நிலையில் மலையக மக்களின் அரசியலையும் இ.தொ.கா.அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுப்பத்தில் அவர் கொண்டிருந்த அக்கறையை நாங்கள் கவனித்து வந்துள்ளோம்.

அவரும் நானும் சமகாலத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றோம். அந்த வகையில் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்கள் மீது கொண்டுள்ள கரிசனையை நான் நன்கறிவேன். எனவே அவரின் இந்த திடீர் இழப்பு மலையக மக்களுக்கு பேழிப்பு மட்டுமல்ல இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கும் இழப்பே.

எனவே மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, அவரின் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்