இந்தியா, அவுஸ்ரேலியாவிலிருந்து 304 பேர் நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இலங்கைக்கு வர முடியாமல், அவுஸ்ரேலியாவிலும் இந்தியாவிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 304 பேர் இன்று நாட்டினை வந்தடைந்துள்ளனர்.

ரீலங்கன் எயார்லைன்ஸின் 02 விசேட விமானங்கள், இன்று (சனிக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

முதலில் இந்தியா, மும்பாய் நகரில் சிக்கியிருந்த இலங்கையின் முப்படை வீரர்கள் 18 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1042 எனும் விசேட விமானம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 286 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 605 எனும் விசேட விமானம், அதிகாலை 5.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்