புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுளள ஊடக அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது தொழில் வாய்ப்புக்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களிலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் தொடரும் என வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார்.

சமீபத்தில் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களில் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களின் அதிகரித்த எண்ணிக்கையைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது காணப்படும் கணிசமான அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, கோவிட் பணிக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும். எதிர்காலத்தில் அனைத்து விமானங்களிலும் ஏறுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த மற்றும் இரண்டு அமைச்சுக்களினதும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் இன்று மாலை (மே 29, 2020) நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் இந்த அவதானிப்புக்களை மேற்கொண்டார்.

அண்மைய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, மே 27ஆந் திகதிய நிலவரப்படி, 123 நாடுகளைச் சேர்ந்த 42,522 பேர் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்ப முற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில், 34,881 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவதுடன், அவர்களில் 20,893 பேர் மத்திய கிழக்கில் வசிக்கும் அதே நேரத்தில், 4,961 பேர் குறுகிய கால வீசாவையுடையவர்களும், 2,016 பேர் மாணவர்களுமாவர்.

குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பான முன்னேற்றங்களை நோக்குகையில், நாடு திரும்பிய 466 பேரில் 379 பேர் பொது மன்னிப்பின் மூலம் பயனடையும் நிமித்தம் ஏப்ரல் 21 – 25 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முகாம்களில் சரணடைந்து, திருப்பி அனுப்பப்படுவதற்காகக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

87 பேர் குவைத் தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்தவர்களாவர். மே 19 ஆந் திகதி குவைத் எயார்வேஸின் இரண்டு விமானங்களின் மூலமாக இவர்கள் குவைத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை நடாத்துமாறு குவைத் வெளிவிவகார அமைச்சிடம் மே 11 மற்றும் மே 14 ஆந் திகதிய இராஜதந்திரக் குறிப்புக்களினூடாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், இது சாத்தியமில்லை என்றும், கோவிட் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்ட எந்தப் பயணியும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது. குவைத்தை விட்டு வெளியேறிய ஏனைய நாடுகளைச் சேர்ந்த எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிடப்பட்டது.

தற்போது மாலைதீவில் மிகப் பெரிய பாதிப்புக்கள் காணப்படுவதுடன், தமது பிரஜைகளை வெளியேற்றுமாறு வெளிநாட்டு அரசாங்கங்களிடம் வெளிப்படையாகக் கோரும் வகையில், மாலைதீவு அரசாங்கத்தினால் கிரேட்டர் மாலியில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாலைதீவிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்படவேண்டிய 7000 பேரில், கிட்டத்தட்ட 2000 பேர் கிரேட்டர் மாலியில் உள்ளனர்.

மே 14ஆந் திகதி, 284 பேர் மீள அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ஒரு சில மருத்துவ அவசரகால நிகழ்வுகளின் காரணமாக, மாலிக்கு வெளியிலிருந்து நபர்களை வெளியேற்ற சிறப்பு அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை சாதனங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வழங்குதல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்த மாலைதீவு அதிகாரிகளிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆலோசனைகளை நடாத்தியுள்ளது.” என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்