துணைவேந்தர் மதிப்பீட்டுக் குழுவுக்கான பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் தெரிவு!

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மதிப்பீட்டுக் குழுவுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக மூதவைப் பிரதிநிதிகள், பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் மூத்த பேராசிரியர் கி.விசாகரூபன் மற்றும் விலங்கியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ்.நோபிள் சுரேந்திரன் ஆகியோரே மூதவையின் சார்பில் பேரவையினால் துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சுற்றுநிரூபத்தின் வழிகாட்டுதல்களுக்கமைய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் இருந்து தகுதி, தராதரங்களின் அடிப்படையில் புள்ளியிட்டு, பொருத்தமானவர்களில் ஆகக் கூடியது ஐந்து (ஐந்துக்குக்கு குறைவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் ஆகக் குறைந்தது மூன்று) விண்ணப்பதாரிகளைப் பட்டியலிடும் பணியை மேற்கொள்வதற்கென மதிப்பீட்டுக் குழு ஒன்று விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் ஜுன் 9) அமைக்கப்படுதல் வேண்டும்.

இந்த மதிப்பீட்டுக்குழுவில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் மூதவையில் அங்கம் வகிக்கும் மூத்த பேராசிரியர்கள் இருவரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் மூவரும் இடம்பெறுவர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் மூவரில் ஒருவர் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் சாராத பிறிதொரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் பேரவையில் அங்கம் வகிக்காத ஒருவராகவும் இருத்தல் வேண்டும். அவரே துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவராகச் செயற்படுவார். அத்தகைய ஒருவர் துணைவேந்தர் தெரிவுக்கான விண்ணப்பதாரிகளில் ஒருவராக முடிவுத் திகதியின் பின்னர் தெரிய வந்தால் பல்கலைக்கழகப் பேரவையின் செயலாளர் (பதிவாளர்) இது பற்றி உடனடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தி, புதிதாக வேறொருவரை நியமிக்குமாறு கோருதல் வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஏனைய இருவரில் ஒருவர் இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த மூத்த அதிகாரியாகவும் அமைச்சரவை அங்கீகாரமுள்ள அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் இருப்பார். மூன்றாமவர் பிரபல்யமான அரச அல்லது தனியார் நிறுவனமொன்றின் தலைவராகவோ பிரதம நிறைவேற்று அதிகாரியாகவோ இருப்பார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மதிப்பீட்டுக் குழுவுக்கு நியமனம் செய்யப்படுபவர்களின் விபரங்கள் எதிர்வரும் யூன் முதல் வாரத்துக்கு முன்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்தது.

கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் காரணம் எதுவும் கூறப்படாமல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின் துணைவேந்தருக்கான அதிகாரங்களுடன் கடந்த வருடம் மே மாதம் முதல் மூன்று மாத காலத்துக்கு வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போதிலும், கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அந்தப் பணிகளைப் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டதுக்கமைய தெரிவு பிற்போடப்பட்டிருந்தது.

அதன்பின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் செயலிழந்ததன் காரணமாக இழுபறிப்பட்ட துணைவேந்தர் தெரிவு, கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய ரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன் பேராசிரியர் க.கந்தசாமிக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியாக மூன்று மாதங்களுக்கொரு முறை நியமனம் நீடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் கோரப்பட்டிருந்தது. இதற்கான முடிவுத் திகதி எதிர்வரும்  ஜுன் 9 ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.