ஊரடங்கு வேளையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உடலின் உஷ்ணத்தை அளவிட்ட பின்னர் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சி.எல்.எப் வளாகத்தில் இருந்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது.

அங்கு பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர், அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இறுதிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நோர்வூட்டில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதுடன், குறிப்பிட்ட அளவானவர்களே மைதான வளாகத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்