தமிழரின் தலையெழுத்தில் இனியும் விளையாட வேண்டாம்: இந்திய உயர்ஸ்தானிகரிடம் குகவரதன் வலியுறுத்தல்

வட-கிழக்கு இணைப்பையையும் சிதறி நிற்கும் தமிழர் அரசியலையும் மீளிணைப்பதற்கு இந்திய மத்திய அரசுக்கு இதுவே சரியான தருணமாகும். இனியும் தமிழரின் தலையெழுத்தில் விளையாட வேண்டாம் என்று இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ.கோபால் பாக்லேயிரிடம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற வேட்பாளருமான பொறியியலாளர்.சண்.குகவரதன் கோரிக்கை விடுத்துள்ளார் .

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ.கோபால் பாக்லே, பதவியேற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்குக் கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசம் என்பதை அங்கீகரிப்பதில் இந்திய மத்திய அரசுக்குப் பிரச்சினை என்பது வெளிப்படைதான்.

எழுபது ஆண்டுகால போராட்டத்தில் இடையிடையே ஏற்பட்ட குழப்ப நிலைமைகளுக்கும் அதுவே காரணம். ஆனாலும் ஈழத் தமிழர்களின் ஒருமித்த குரல் உறுதியாக இருந்தால்தான் இந்தியா தனது வல்லரசு கனவை தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியாகச் சாதிக்க முடியும்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  உள்ளிட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளும்  இணைந்த வட.கிழக்குத் தாயகம் என்ற கோட்பாட்டில் உறுதியாக உள்ளன. இருந்தாலும் அவர்களுக்கு உள்ளேயேயான முரண்பாடுகளால் வேறுவேறு திசைகளில் அல்லது தனித்தனியாக பயணிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையானது இந்திய அரசுகளுக்கோ ஐரோப்பிய நாடுகளுக்கோ இசைந்து செயற்படாத நிலைமை ஆரம்பமாகியுள்ளதோடு செவிசாய்க்காத போக்கிலும் செயற்பட்டு வருகின்றது. இயல்பாகவே இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்று அதன் கீழ் உள்ள சட்டதிட்டங்களின் படி வாழ முடியும் என்ற நம்பிக்கையை காலத்தின் தேவையாக எமது தமிழ் மக்கள் மத்தியிலும் திணிக்கப்பட்டுள்ளது.

இவ்விதமான காரணங்களால் வெறுமனே வாக்கு அல்லது தேர்தல் பிரதிநிதித்துவ அரசியலாக மட்டுமே தமிழர் அரசியல் காலம் கடந்து போகிறது. இது இந்தியா போன்ற வல்லரசு நாடுகளுக்கு ஆரோக்கியமானதாக இருக்க போவதில்லை.போர் நிறைவுக்கு வந்துள்ள சூழலில் இலங்கை தமிழர் மீது கரிசணை கொண்டுள்ள இந்தியா வீட்டுத்திட்டங்கள் மீண்டெழுவதற்கான இதர வாழ்வாதர திட்டங்களை வழங்கி வருகின்றது. அதுமட்டுமன்றி கல்வி, புலமைப்பரிசில்கள் உள்ளிட்ட சமூக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளையும் வழங்கி வருகின்றது.

எனினும், தற்போது வரையில் தமிழர்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் இதுவரையில் காத்திரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது கவலை தரும் விடயமாகும்.

பல இந்தியத் தூதுவர்கள் வருகிறார்கள், செல்கிறார்கள். அமைச்சர்களும் வருகிறார்கள் செல்கிறார்கள். நான் அறிந்தவரையில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரான ஸ்ரீ.கோபால் பக்லே, கடந்த காலங்களில் நெருக்கடியான பல களங்களில் பணியாற்றிய அனுபவத்தினை நிறைவாகவே கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் தமிழர்கள் தமது தாயகப்பிரசேத்தில் எத்தகைய நெருக்கடிகளைக் கொண்டிருக்கின்றார்கள். தமது நிலத்தினை உறுதி செய்வதற்கும் இருப்பை பேணுவதற்கும் எவ்வளவு போராடுகின்றார்கள் என்பதை நிச்சயம் அவரால் புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே, அந்த நெருக்கடிகளிலிருந்தெல்லாம் தமிழர்கள் விடுபட்டு நிம்மதியான இயல்பு நிலையுடைய வாழ்க்கையொன்றை வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டியதும் இந்தியாவின் தார்மீக கடமை. அதற்கு முதலில் அவர்களின் தாயகம் மீள இணைக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

எனவே  இந்த விடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்தி, அடுத்து வரும் காலப்பகுதியில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை புதிய உயர்ஸ்தானிகர் முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எம்மத்தியில் உள்ளது. இவ்விடயத்தில் அதீத கவனமெடுத்து நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளை உயர்ஸ்தானிகர் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை அதிகமுள்ளது.

குறிப்பாக இலங்கையுடன் வரலாற்றுக்காலந்தொட்டு பல்வேறு தொடர்புகள் காணப்படுகின்றன. அதிலும் தமிழர் தாயகமாக இருக்கும் வடக்கு கிழக்கிற்கும் இந்தியாவிற்கும் காணப்படும் தொடர்புகள் எண்ணிலடங்காது பின்னிப்பிணைந்துள்ளன.

இவ்வாறிருக்க, இலங்கைத் தமிழர்கள் தமது அபிலாஷைகளை பெறுவதற்காக எத்தனையோ வழிகளில் போராடி வருகின்றார்கள். ஆனால் இன்றுவரையில் அது பூர்த்தி செய்யப்படவில்லை. அதற்கான தொடர் ஏமாற்றங்கல் மட்டுமே நீடித்துக்கொண்டே செல்கின்றது.

தமிழர்கள் மீதான இந்தியாவின் அதீத கரிசனையும்  ஆதரவும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக 13ஆம் திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டு தமிழர்களின் தயாகம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் அதன் பின்னரான காலத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக அத்தாயகம் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மீளிணைப்பு  சார்த்தியமற்றதாக செல்கின்றது.

அத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் நினைத்தால் சர்வதேச ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய சரத்துகளை ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஒரு நாடு தன்னிச்சையாக மீறியது என்றஅடிப்படையில்,அதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில்  முறையிட முடியும். ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சுமத்தி இந்திய மத்திய அரசு ஏன் இதுவரை காலமும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடவில்லை? என்ற கேள்வி இத்தனை ஆண்டுகளின் பின்னர் எழுவது இயல்பானது.

அத்துடன் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி விசேட செயலணி தொடர்பான தமிழ்மக்கள் மீதான அச்சம்,  கிழக்கு மாகாணத்தில் புனித பூமி என்ற ரீதியில் பௌத்த சின்னங்களை மைய படுத்தி காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமையை என்பனவற்றை இந்திய தூதுவர் கவனத்தில் கொள்ளவேண்டும் இது நிரந்தரமாக வடக்கு கிழக்கை பிரிக்கும் செயல்பாடு என தோன்றுகிறது .

இவ்வாறான நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் மட்டுமே தமிழர் விடயத்திலுள்ள கோரிக்கைகளை நடைமுறைச்சாத்தியமாக்கும் இயலுமை உள்ளது.

ஆகவே, தற்போது காணப்படுகின்ற நிலைமைகளின் அடிப்படையில் தமிழர் தாயகம் உறுதிப்படுத்தப்படுவதானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பினையும் வலுவாக்கும் என்பதையும் உணர்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று புதிய உயர்ஸ்தானிகரிடத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என குகவரதன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்